உடலிற்கு தேவையான வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை பழங்கள் அளிக்கின்றன. அவற்றை உண்ணும் போது அதன் சத்துக்கள் நேரடியாக நமக்குக் கிடைக்கின்றன. அதேசமயம் பழங்களை இயற்கையான அழகுசாதன பொருளாக உபயோகிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்து உபயோகிக்கலாம். அழகு நிலையம் செல்லாமலேயே குறைந்த செலவில் டல்லான முகத்தை ப்ரெஷ்சாக்கலாம்.
கிளன்சிங் பால் 

மாசடைந்த சூழல் காரணமாக வெளியே சென்று வந்தாலே முகம் கறுத்துவிடும். முகத்தின் தோல் அறைகளில் அழுக்குகள் புகுந்து பரு, கொப்புளங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே பழக்கூழ் மாஸ் போடும் முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அதற்கு முதலில் கிளன்சிங் செய்யவேண்டும். 

அதற்கு பால் அவசியமானது. ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பாலை எடுத்து முகம் முழுவதும் பூச வேண்டும். பின்னர் மெதுவாக தேய்க்கவேண்டும். 5 நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சைக் கொண்டு துடைக்கவேண்டும். இதனால் முகத்தினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும். 

புத்துணர்ச்சி தரும் மசாஜ் 

தயிரானது இயற்கை அழகு சாதனங்களில் முதன்மையானதாக உள்ளது. இது சூரியக்கதிர் தாக்குதலினால் ஏற்படும் கருமையை போக்குகிறது. சருமத்திற்குத் தேவையான அனைத்து வித சத்துக்களும் கிடைக்கிறது. தேன் பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் தேனுடன் பப்பாளிக்கூழ் சேர்த்து மசாஜ் செய்யலாம். 

தக்காளி, ஆரஞ்ச், கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்றவைகளையும் கூழ் போல மசித்து மசாஜ் செய்யலாம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். 

வெந்நீர் ஒத்தடம் 

மசாஜ் முடிந்தவுடன் ஸ்கிரப் செய்ய வேண்டும். வால்நெட், பாதாம் இவற்றைப் பொடியாக அரைத்து ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப் பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் அழுத்தி தடவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். 

பின்னர் சிறிய டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்து பொறுக்குமளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். இந்த முறையை பின்னபற்ற முடியாதவர்கள் சிறிய பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் அதனுள் வேப்பிலைகள் சிறிது போட்டு அதோடு சேர்த்து ஆவி பிடித்தால் மிகவும் நல்லது.

பழக் கூழ் பேசியல் 

இதற்கு அடுத்தபடியாக பேசியல் போடலாம். முகத்திற்கு பேக் போட நமக்கு தேவையான பழங்களை தேர்ந்தெடுக்கவேண்டும். கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக இருக்கவேண்டும். பின்னர் முகம் கழுவினால் உங்கள் முகத்தைப் பார்த்து நீங்களே அசந்துபோவீர்கள். அந்த அளவிற்கு முகம் பொலிவாய் மாறும். பழங்களை தனியாகவும் அரைத்து பேசியல் போடலாம் அல்லது இரண்டு, மூன்று பழங்களைச் சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Powered by Blogger.