வெயிலில் செல்லும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்...!
தற்போது காலநிலை மிகவும் மோசமாக உள்ளது. கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலைப் போன்றே அனைத்து காலங்களில் வெயில் கொளுத்துகிறது. சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் சூரிய ஒளியும் ஒன்று. என்ன தான் மழைக்காலமாக இருந்தாலும், சூரியன் சுட்டெரித்துக் கொண்டு தான் உள்ளது.
அப்படிப்பட்ட சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து விடுபட ஒருசில செயல்களை தவறாமல் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால், சருமத்தை சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம். அதேப்போல் ஒருசிலவற்றை செய்யவும் கூடாது.
இங்கு வெயிலில் சுற்ற செல்லும் முன் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சன் ஸ்க்ரீன்
வெயிலில் செல்லும் 15-20 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்க்ரீன் தடவ வேண்டும். இதனால் சருமமானது அந்த க்ரீம்மை உறிஞ்சி, சருமத்தை சூரிய ஒளியால் கருமையடையாமல் பாதுகாக்கும்.
எலுமிச்சை வேண்டாம்
எலுமிச்சை சருமத்திற்கு நல்லது தான். ஆனால் வெளியே வெயிலில் செல்லும் முன் சருமத்திற்கு எலுமிச்சையைப் பயன்படுத்த வேண்டாம். அப்படியே பயன்படுத்தினால் 2-3 மணிநேரம் கழித்து வெளியே செல்லுங்கள். இல்லாவிட்டால், சருமத்தில் வெடிப்புக்கள் மற்றும் பருக்கள் வர ஆரம்பிக்கும்.
எக்காலத்திலும் தவிர்க்கக்கூடாது
வெயில் தான் இல்லையே என்று வெளியே செல்லும் முன் சன் ஸ்க்ரீன் தடவுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் எக்காலத்திலும் சன் ஸ்க்ரீன் தடவுவதைத் தவிர்க்கக் கூடாது. ஏனெனில் சன் ஸ்க்ரீன் தடவினால், சரும புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
கூந்தலுக்கு பாதுகாப்பு அவசியம்
வெளியே வெயிலில் செல்லும் போது கட்டாயம் ஏதேனும் ஒன்றைக் கொண்டு கூந்தலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சூரிய ஒளி நேரடியாக கூந்தலில் படுமாயின், கூந்தல் தனது இயற்கையான நிறத்தை இழப்பதோடு, அதிக வறட்சியடைந்து தனது மென்மைத்தன்மையை இழந்துவிடும்.
பருக்களை மறைக்கவும்
உங்கள் முகத்தில் பருக்கள் இருந்தால், அந்த பருக்களை சூரிய ஒளி நேரடியாக படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சூரிய ஒளியின் தாக்கத்தினால் பருக்கள் உடைந்து, அதனால் முகத்தில் பருக்கள் அதிகமாகிவிடும்.
கூலிங் கிளாஸ் முக்கியம்
சூரிய ஒளி சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் ஆபத்தானது. எனவே வெயிலில் செல்லும் போது கண்களுக்கு பாதுகாப்பு தரும் கூலிங் கிளாஸ் அணிய வேண்டும். இதனால் கண்களில் தொற்றுக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் மற்றும் சூரிய கதிர்களின் தாக்கத்தில் இருந்து கண்களைப் பாதுகாக்கலாம்.
வெட்டுக்காயங்களை மறைக்கவும்
முகத்தில் ஏதேனும் வெடிப்புக்கள் இருந்தால், அவற்றின் மீது சூரிய ஒளி படாதவாறு மறைக்கவும். இல்லாவிட்டால், அவ்விடத்தில் தொற்றுகள் ஏற்பட்டு, வெடிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.
மேக்கப்பை தவிர்க்கவும்
வெயிலில் செல்லும் முன் மேக்கப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சூரியக்கதிர்கள் மேக்கப் மீது பட்டால், அவை உருகி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே வெயிலில் செல்லும் போது ஃபுல் மேக்கப்பில் செல்வதைத் தவிர்த்திடுங்கள்.