அனைவருமே நல்ல பொலிவான மற்றும் எவ்வித பிரச்சனையும் இல்லாத சருமம் வேண்டும் என்று தான் விரும்புவோம். ஆனால் அத்தகைய சருமத்தைப் பெறுவது என்பது எளிதான விஷயம் அல்ல. எப்படி நமக்கு பிடித்ததை எளிதில் பெற பல இடையூறுகள் ஏற்படுமோ, அதேப் போல் அழகான சருமத்தைப் பெறவும் சில இடையூறுகள் ஏற்படும். அதில் முகப்பரு, பிம்பிள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் சரும நிற மாற்றம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.


இத்தகைய சரும பிரச்சனைகள் நீங்கினாலும், அதனால் சருமத்தில் உண்டான கறைகள் அவ்வளவு எளிதில் நீங்காது. மேலும் அந்த கறைகளைப் போக்க பல்வேறு செயல்களை மேற்கொள்வோம். உதாரணமாக, க்ரீம், ஸ்பெஷல் ஃபேஸ் வாஷ் என்றெல்லாம் பயன்படுத்தியிருப்போம். இருப்பினும் எந்த ஒரு பலனும் இருக்காது. ஒருவேளை அப்படியே இத்தகைய சரும கறைகளைப் போக்க வேண்டுமானால், அழகு நிலையங்களுக்கு தான் செல்வோம். அப்படி சென்றால், நிறைய பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் அப்படி அதிக பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக, அந்த பணத்தைக் கொண்டு பழங்களை வாங்கினால், அதை சாப்பிட்டு உடலுக்கு சத்து கிடைத்தது போன்றும் இருக்கும், அதே சமயம் அதைக் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக இப்படி பழங்களைக் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவும் வராது. சரி, இப்போது சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ள எந்த பழங்களை எல்லாம் கொண்டு மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் மாஸ்க்குகளை போட்டால், சருமத்தில் உள்ள கருமையை நீக்கி, நன்கு வெள்ளையாக மாறலாம்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தைக் கொண்டு சருமத்திற்கு மா1க் போட்டால், சரும பழுப்பு, முகப்பரு போன்றவற்றில் இருந்து விடுபடுவதோடு, அதனால் சருமத்தில் படிந்த கறைகளை போக்கி, நல்ல பொலிவான சருமத்தைப் பெறலாம். அதற்கு ஸ்ட்ராபெர்ரியை நன்கு மசித்து, அதில் பால் அல்லது தயிர் சேர்த்து கலந்து, வாரத்திற்கு மூன்று முறை மாஸ்க் போட வேண்டும்.

வாழைப்பழம்

வருடம் முழுவதும் விலை மலிவாக கிடைக்கும் ஒரு பழம் தான் வாழைப்பழம். இத்தகைய வாழைப்பழத்தை மசித்து, அதில் தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு நீங்கி, முகச் சருமத்தின் அழகும் அதிகரிக்கும்.

தர்பூசணி

தர்பூசணி உடலின் வறட்சியை போக்குவது மட்டுமின்றி, சருமத்திற்கு நல்லது. அதிலும் இது சருமத்தில் தங்கியுள்ள கறைகளை போக்கி, சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு தர்பூசணி துண்டை கொண்டு, முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஆப்பிள் 

ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்கும். அதிலும் ஆப்பிளைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போட்டால், முகப்பரு, சரும நிற மாற்றம் போன்றவற்றையும் சரிசெய்யும். அதற்கு ஆப்பிளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டால், அது சருமத்தில் உள்ள கருமை மற்றும் அழுக்கை நீக்கி, சருமத்தை பொலிவாகவும் வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு ஆரஞ்சு பழச்சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

பப்பாளி

பப்பாளியை அரைத்து அதில் தயிர் அல்லது பால் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.

செர்ரி

செர்ரிப் பழங்களை அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, மாஸ்க் போட்டால், நல்ல அழகாக சருமத்தைப் பெறலாம்.

தக்காளி 

ஒரு துண்டு நாட்டு தக்காளியை முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமத்தில் உள்ள கிருமிகள், அழுக்குகள் போன்றவை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

சிவப்பு நிற ப்ளம்ஸ்

சிவப்பு நிற ப்ளம்ஸை பால் சேர்த்து அரைத்து, அதனை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் அலசினால், சருமத்தில் உள்ள முகப்பருக்கள் நீங்கி, முகம் பொலிவாகும்.

மாதுளை

மாதுளையை ஒரு நேச்சுரல் டோனர் என்று சொல்லலாம். ஏனெனில், இதனைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, அழுக்குகளும் நீங்கும். அதற்கு இந்த பழத்தை சாறு எடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.

அவகேடோ

இது மற்றொரு ஃபேஸ் பேக். அதற்கு அவகேடோவை அரைத்து, அதில் தயிர் அல்லது தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், அதில் உள்ள பொட்டாசியம், சருமத்தின் ஈரத்தன்மையை தங்க வைத்து, சருமத்தை பொலிவோடு வெளிப்படுத்தும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் குளிர்ச்சி தன்மை அதிகம் உள்ளதால், அதனைக் கொண்டு சருமத்தை பராமரிக்கும் போது, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறையும்.

கிவி 

கிவி பழத்திலும் சருமத்திற்கு தேவையான எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதற்கு கிவி பழத்தை அரைத்து, அதில் தயிர் சேர்த்து கலந்து மாஸ்க் போட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் அழகாக காணப்படும்.

எலுமிச்சை 

எலுமிச்சை சாற்றினைக் கொண்டு, சருமத்தை 2 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் நீங்கி, முகம் சுத்தமாகவும், பொலிவோடும் காணப்படும்.

திராட்சை 

திராட்சை ஜூஸ் தினமும் குடித்து வந்தால், சருமம் பொலிவாகும் என்று கேள்விப்பட்டிருப்போம். அதேப் போல் அந்த திராட்சை சாற்றினைக் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்தால், பல்வேறு சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அவுரிநெல்லி 

புளிப்பு சுவை மிக்க இந்த அவுரிநெல்லியை அரைத்து அதனை முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்

ராஸ்ப்பெர்ரி 

கரும்புள்ளிகள் இருந்தால், அதனை சுத்தமாக போக்க வேண்டுமானால், ராஸ்ப்பெர்ரி கொண்டு முகத்தை 15 நிமிடம் தேய்த்து, பின் மென்மையான துணி அல்லது காட்டனை பாலில் நனைத்து, முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமம் பட்டுப் போன்றும், பொலிவோடும் இருக்கும்
Powered by Blogger.