அடிக்கடி சிக்கு பிடிக்கும் கூந்தலைப் பார்த்தால், பொலிவிழந்து அசுத்தமானதாக காட்சியளிக்கும். குறிப்பாக சுருட்டை முடி உள்ளவர்கள் தான், இத்தகைய பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். அதுமட்டுமின்றி, சுருட்டை முடி இருந்தால், அதனைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினம். மேலும் அதனைப் பராமரிக்க பல்வேறு கெமிக்கல் உள்ள பொருட்களைப் பயன்படுத்தினால், நிறைய செலவுகள் ஆவதோடு, தற்காலிகமாகத் தான் இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், சுருட்டை முடி உள்ளவர்களின் கூந்தலில் எண்ணெய் பசையானது விரைவில் நீங்கிவிடுவதால், அதன் தரம் குறைந்து, பல்வேறு கூந்தல் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஆகவே சுருட்டை முடி உள்ளவர்களும், அடிக்கடி சிக்கு ஏற்படுபவர்களும், இயற்கை முறையில் கூந்தலை பராமரித்தால், கூந்தலை மென்மையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக வாரம் 1-2 முறை தலைக்கு ஆயில் மசாஜ் செய்து குளித்து வந்தால், கூந்தலை ஆரோக்கியமாகவும் வறட்சியின்றியும் வைத்துக் கொள்ளலாம். இதனால் கூந்தல் சிக்கு ஏற்படாமல் இருக்கும். இங்கு கூந்தலை சிக்கு அடையாமல் வைத்துக் கொள்வதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை பின்பற்றி, அழகான, மென்மையான கூந்தலைப் பெறுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை மசித்து, அதில் 1-2 டேபிள் ஸ்பூன் பாதாம் அல்லது அவகேடோ ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தல் வறட்சியின்றி, மென்மையாகவும், பொலிவோடும், சிக்கு அடையாமலும் இருக்கும்.

தயிர்

கூந்தல் பிரச்சனைகளைப் போக்குவதில் தயிர் முதன்மையான பொருள். அதற்கு தயிரை தலையில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் வறட்சியை நிச்சயம் போக்கி, கூந்தலில் அடிக்கடி சிக்கு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

அவகேடோ

கூந்தல் வறட்சியை போக்க சிறந்த பொருள் என்றால் அது அவகேடோ தான். ஏனெனில் அவகேடோவில் கூந்தலில் எண்ணெய் பசையை தக்க வைக்கும் சக்தி அதிகம் உள்ளது. எனவே அந்த அவகேடோவை, தயிருடன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை மாஸ்க் போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

மயோனைஸ்

மயோனைஸ் ஒரு சிறந்த கண்டிஷனர். அதற்கு மயோனைஸை ஸ்கால்ப் மற்றும் கூந்தல் முழுவதும் தடவி, ஷவர் தொப்பி கொண்டு 45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு நன்கு நீரில் அலச வேண்டும். இதனால் கூந்தல் வறட்சி நீங்குவதுடன், அதன் பொலிவும் அதிகரிக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு ஸ்கால்ப்பை சுத்தம் செய்வதோடு, கூந்தலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். எனவே கூந்தலுக்கு இயற்கை பொருட்களைக் கொண்டு மாஸ்க் போடும் போது, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பீர்
உண்மையிலேயே பீர் கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் வறட்சி இல்லாமல் இருப்பதோடு, மென்மையாகவும் மாறும். அதற்கு பீர் ஷாம்புவையோ அல்லது ஷாம்பு போட்டு குளித்த பின்னர், இறுதியில் சிறிது பீரை நீரில் கலந்தோ, கூந்தலுக்கு பயன்படுத்த வேண்டும்.

வினிகர்

வினிகர் கொண்டு கூந்தலை அலசினாலும், கூந்தல் மென்மையாகவும், சிக்கு பிடிக்காமலும் இருக்கும். அதுவும் தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின்னர், இறுதியில் வினிகரை நீரில் கலந்து கூந்தலை அலச வேண்டும்.

முட்டை

நல்ல பொலிவான மற்றும் மென்மையான கூந்தல் வேண்டுமானால், முட்டையின் வெள்ளைக் கருவில், சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

சூடான ஆயில் மசாஜ்

வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், நாளடைவில் கூந்தலில் சிக்கு ஏற்படுவது குறைவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.

குறிப்பு

மேற்கூறியவற்றை வாரம் 1-2 முறை தவறாமல் செய்து வந்தால், கூந்தல் வறட்சியை போக்குவதோடு, கூந்தல் மென்மையாகவும், பொலிவோடும், ஆரோக்கியமாகவும் வளர ஆரம்பிக்கும். குறிப்பாக கூந்தல் சிக்கு அடையாமல் இருக்கும்.
Powered by Blogger.