தற்போத கோடை பழங்களுள் ஒன்றான பலாப்பழம், கோடையில் மட்டுமின்றி, மழைக்காலத்திலும் அதிகம் கிடைக்கிறது. இந்த பழத்தைப் பார்த்தாலே, வாயிலிருந்து எச்சிலானது ஊறும். அந்த அளவில் அதன் நிறத்தாலும், மணத்தாலும், அது பலரை கவர்ந்துள்ளது. அத்தகைய பலாப்பழம், உடலுக்கு பல நன்மைகளைக் கொடுத்தாலும், சருமத்தைப் பராமரிப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது.
ஆம், இதுவரை எத்தனையோ பழங்களின் ஃபேஸ் பேக்குகளைப் பற்றி பார்த்திருப்போம். ஆனால், பலாப்பழத்தைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போட்டிருக்கமாட்டோம். உண்மையில், பலாப்பழத்தை சாப்பிடுவதுடன், அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் அழகாக ஜொலிக்கும். மேலும் சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல், இந்த பழத்தை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தின் நிறமும் அதிகரிக்கும். சரி, இப்போது பலாப்பழத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமம் பொலிவாக மின்னும் என்று பார்ப்போம்.

சுருக்கங்களை போக்க...

சிலருக்கு கண்களைச் சுற்றி சுருக்கங்களானது வந்து, முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கும். இத்தகைய சுருக்கங்களைப் போக்குவதற்கு பலாப்பழத்தை குளிர்ந்த பால் சேர்த்து அரைத்து, அதனை முகத்திற்கு தடவி வந்தால், சுருக்கங்களை போக்கலாம். அதிலும் இந்த முறையை நான்கு வாரங்களுக்கு பின்பற்றினால், சுருக்கங்களை முற்றிலும் போக்கிவிடலாம்.

முகப்பருவைப் போக்க..

பலாப்பழத்தை அதிகம் சாப்பிட்டால், உடலில் வெப்பமானது அதிகரித்து, அந்த வெப்பத்தினால் முகத்தில் பருக்கள் வந்துவிடும். மேலும் கோடையில் பலர் முகப்பரு பிரச்சனைக்கு ஆளாகியிருப்பார்கள். அத்தகையவர்கள், இதனைப் போக்குவதற்கு பலாப்பழத்தை அரைத்து, அந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், பருக்கள் முழுவதுமாக நீங்கிவிடும்.

எண்ணெய் பசை சருமம்

முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருந்தால், அதனைப் போக்குவதற்கு பலாப்பழ ஃபேஸ் பேக் போட்டால் போக்கிவிடலாம். அதிலும் பலாப்பழத்தை அரைத்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சரும நிற மாற்றத்தைப் போக்க...

கோடையின் போது ஏற்பட்ட சரும நிற மாற்றத்தைப் போக்குவதற்கு, பலாப்பழத்தை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை ஊற்றி, நிறம் மாறிய இடங்களில் தடவி, ஊற வைத்து கழுவ வேண்டும். குறிப்பாக, இந்த முறையை ஒரு மாதம் தொடர்ந்து, வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பழுப்பு நிற சருமமானது முற்றிலும் நீங்கிவிடும்.

அழகான சருமத்திற்கு...

முகம் பட்டுப் போன்று ஜொலிக்க வேண்டுமெனில், பலாப்பழத்தின் விதையைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு பலாப்பழத்தின் விதையை பால் மற்றும் தேன் சேர்த்து அரைத்து, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். அதுமட்டுமல்லாமல், நன்கு கனிந்த பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தாலும், சருமமானது ஜொலிக்கும்.

கறைகளை நீக்க...

சருமத்தில் கறைகள் போன்று காணப்படுவதை போக்க பலாப்பழம் சிறந்ததாக இருக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, சருமக்கறைகளைப் போக்கும்.

கருமையை போக்க...

பெரும்பாலானோருக்கு உதடுகளைச் சுற்றி கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, பலாப்பழத்தை அரைத்து, உதட்டைச் சுற்றி தடவி, 5 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்

மருக்கள்

மருக்களைப் போக்குவதற்கு நிறைய வைத்தியங்கள் இருந்தாலும், பலாப்பழத்திற்கு இணை எதுவும் இல்லை. அதற்கு பலாப்பழத்தின் விதையை நன்கு காய வைத்து, அரைத்து மருக்கள் உள்ள இடங்களில் தடவினால், மருக்கள் மறையும். அதிலும் இந்த முறையை தொடர்ந்து 2 வாரத்திற்கு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சரும வறட்சியைப் போக்க

சருமத்தின் வறட்சியைப் போக்கி, மென்மையாக வைப்பதில் பலாப்பழம் மிகவும் சிறந்தது. இதற்கு பலாப்பழத்தின் சாற்றினை சருமத்தில் தடவி காய வைத்து, குளிர்ந்த பாலால் கழுவி வந்தால், விரைவில் அதற்கான பலனை பெறலாம்.

சரும காயங்களை போக்க

பெண்கள் பலர் முகத்தில் உள்ள முடிகளைப் போக்குவதற்கு அழகு நிலையங்களுக்குச் செல்வார்கள். அப்போது த்ரெட்டிங் செய்யும் போது, முகத்தில் சிறிய காயங்கள் ஏற்படும். அத்தகைய காயங்களைப் போக்குவதற்கு, பலாப்பழத்தின் சாற்றினை தடவி வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள், காயங்களை விரைவில் போக்கிவிடும்
Powered by Blogger.